இறை வழிபாடு மனிதனிடம் என்று தோன்றியதோ அன்றே இறைவனுக்கு மலர்களை படைத்து வழிபடும் பழக்கமும் தோன்றி விட்டது
சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் இறைவனுக்கு விதம், விதமான மலர்களை சூடி அழகு பார்த்ததுடன் அந்த மலர்களை கொண்டுஅர்ச்சனையும் செய்தனர். இதை பழங்கால பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இறை மூர்த்தங்கள் மலர்கள் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதில் நம் மூதாதையர்கள் உறுதியுடன் இருந்தனர். இதன் காரணமாகவே ஆலயங்கள் அருகே தீர்த்த குளத்தையும், நந்தவனத்தையும் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருந்தனர்.
சில குறிப்பிட்ட மலர்கள், அறிவியல் பூர்வமாக மனித குலத்துக்கு நன்மை செய்வதை ஆதி தமிழர்கள் அறிந்து இருந்தனர்.
கோயில்களில் அர்ச்சனைக்கு பயன்படுத்தபடும் பூக்களின் வகைகள் பல்வேறு இருந்தாலும் குறிப்பிட்ட தெய்வத்திற்கு குறிப்பிட்ட பூக்களை மட்டுமே நம் முன்னோர்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதற்காக அவர்கள் கூறுகின்ற விளக்கங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகில் இந்த அளவுக்கு இலைகளையும் பூக்களையும் மரங்களையும், மதத்தில் பயன்படுத்தும் கலாசாரம் வேறு எங்கும் இல்லை. தமிழர்களின் வாழ்வு எந்த அளவுக்கு இயற்கையோடு ஒன்றி இருந்தது என்பதற்கு இது ஒரு சான்று ஆகும்.
பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுக்கள், தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்யக்கூடாது என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
அரச்சனை செய்த பூக்கள் கோயிலில் சாமிக்கு போட்ட மாலைகள் காலில் மிதிபடாத வாறு போட வேண்டும். முடிந்தால் தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி போட்டு மூடிவிடலாம்.
கோயிலில் சாமிக்கு போட்ட மாலைகளை வாகனங்களில் முன்பக்கம் கட்டுவது மிகபெரிய சாபம். இதனால் தீமைகள் மட்டுமே உண்டாகும் நன்மைகள் கிடைக்காது. என்றும் நம் முன்னோர்கள் பல்வேறு நூல்களில் தெரிவித்துள்ளனர்.