தடைபட்டு வரும் நல்ல காரியங்கள் தடை இல்லாமல் நடக்க, வீட்டில் பல நல்ல விஷயங்கள் அரங்கேற மிக எளிமையான இந்த பூஜையை செய்து பாருங்கள்
மனிதர்கள் பலருக்கும் பல விதமான கஷ்டங்கள் இருக்கும். அதே சமயம் அதற்கான தீர்வாக சில பரிகாரங்களும் இருக்கும். அந்த வகையில் மனிதர்களின் சில கஷ்டங்களை தீர்க்கும் சக்தி மருதாணிக்கு உண்டு. முந்தைய காலத்தில் ஏதேனும் பண்டிகைக என்றாலும் வீட்டில் பூஜை என்றாலும் பெண்கள் மருதாணி இலைகளை அரைத்து அவர்களது கையிலும் வீட்டில் உள்ள குழந்தைகளின் கையிலும் வைத்து விடுவார்கள். ஆனால் இப்பொழுது உள்ள பெண்கள் அதனையே சற்று மாற்றி மருதாணி இலைகளை அரைத்து அதனை கோன் வடிவிற்கு மாற்றம் செய்து தனக்குப் பிடித்த வடிவங்களை கையில் வரைந்து கொள்கின்றனர். எனினும் நம் முன்னோர்கள் பின்பற்றிய விஷயத்தையே நாமும் பின்பற்றுகிறோம். இந்த மருதாணியை அழகிற்காக மட்டும் நம் முன்னோர்கள் பயன்படுத்தவில்லை. இதன் பின்னணியில் நிறைய விஷயங்கள் அடங்கி உள்ளன. அவை என்னென்ன? அவற்றின் பலன்கள் என்ன? மருதாணி பூஜையால் ஏற்படும் மகத்துவம் என்னவென்பதை பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
மருதாணி என்றாலே பெண்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு அழகுசாதன பொருள். அதுமட்டுமல்லாமல் கடவுளின் அருள் நிறைந்த இந்த மருதாணியை கையில் இடும் பொழுது மனதிற்கு சந்தோஷம் கிடைக்கிறது. மருதாணி செடி மகாலட்சுமியின் மனம் மகிழ்ந்து ஆசி பெற்ற ஒரு அற்புத செடி. எமனிடம் இருந்து சிறந்த வரம் வாங்கிய தாவரம். இவ்வளவு அருள்நிறைந்த மருதாணி செடியின் இலை மற்றும் விதைகளை நாம் முறைப்படி பயன்படுத்தினோம் என்றால் கடவுளின் அருள் நமக்கும வந்து சேரும்.
மருதாணி பொடி மற்றும் அதன் விதைகளை வைத்து செய்ய வேண்டிய பூஜை: நாட்டு மருந்துக் கடையிலிருந்து மருதாணி பொடி மற்றும் மருதாணி விதைகளை ஒரு கால் கிலோ அளவு இருக்குமாறு வாங்கிக் கொள்ள வேண்டும். ஒரு கண்ணாடி அல்லது பித்தளை கிண்ணத்தில் சில்லரை காசுகளை போட்டு அதன் மீது மருதாணி பொடி மற்றும் அதன் விதைகளை அந்த கிண்ணம் மூழ்கும் அளவிற்கு போட வேண்டும். இதனை பூஜை அறையில் வைத்து அதற்கு மேல் ஒரு மண் விளக்கில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த பூஜையினை வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும்.
மருதாணி பூஜையின் நன்மைகள் : நம்மை செல்வந்தர் ஆக்கும் யோகம் மருதாணி செடிக்கு உள்ளது. எனவேதான் பலர் தங்களது வீடுகளில் மருதாணி செடியை வளர்த்து வருவார்கள். உங்கள் வீட்டில் இந்தப் பூஜையினை செய்வதால் தடைபட்டு வரும் நல்ல காரியங்கள் தடை இல்லாமல் நடந்தேறும். பல நல்ல காரியங்கள் தடை படும் பொழுது நம் மனதில் தோன்றும் ஒரு விஷயம் நமக்கு அதிர்ஷ்டம் இல்லை என்பது தான். இந்த நினைப்பை மாற்ற வல்ல ஒரு அதிசயமிக்க செடிதான் மருதாணி. அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் ஒரு அழகிய தேவதை இந்த மருதாணி செடி ஆவாள்.
வடமாநிலங்களில் எப்பொழுதும் திருமணம், பண்டிகை மற்றும் அவர்களது வீடுகளில் எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும் மருதாணி அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு காரணம் மருதாணி ஒரு அதிர்ஷ்டம் நிறைந்த பொருளாக பார்க்கப்படுவதே ஆகும். மருதாணியை கையில் வைத்திருக்கும் ஆறு நாட்களுக்கும் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களிடம் எந்த தீமையும் நெருங்காது என்பது நம்பப்பட்டு வரும் ஒரு உண்மையாக உள்ளது. எனவே தான் திருமணத்திற்கு முன்பு மருதாணி தினம் கொண்டாடப்பட்டு மணப்பெண் மற்றும் மற்ற பெண்களுக்கும் கையில் மருதாணி போடப்படுகிறது.
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேற நாம் பலவித தானங்கள் கொடுத்திருப்போம். இந்த மருதாணியை தானமாக கொடுத்தோம் என்றால் சிறந்த பலன்கள் நம்மை வந்தடையும். மாங்கல்ய தோஷம் நீங்கும், திருமணம் கைகூடும், கணவன் மனைவி உறவு முறை வலுப்படும், குழந்தை வரம் கிடைக்கும். இப்படி மொத்தத்தில் பெண்களுக்கு சந்தோஷம் அளிக்கக் கூடிய அனைத்து வரங்களையும் இந்த மருதாணி தேவதை கொடுக்கிறாள். எனவே பெண்களே முடிந்தவரை மருதாணியை உங்கள் கையில் போட்டுக் கொள்ளுங்கள். அதிர்ஷ்டம் உங்களை சூழ்ந்து கொள்ளும்.